Saturday, October 12, 2024

அடியோ (ஸ்) அமிகோ

அடியோ (ஸ்) அமிகோ -




அடியோ (ஸ்) அமிகோ -

சமீபத்தில் தமிழில் வெளியான மலையாளத் திரைப்படம். இப்படம் netflix ott தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.

ரசிக்கக்கூடிய புதிய முயற்சிகளை மலையாளத்தில் புதிய இயக்குனர்கள் திறம்பிடவே செய்கிறார்கள் என்று ,மீண்டும், மீண்டும் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.!
சுவாரசியமாக ஆரம்பித்துப் பிற்பகுதியில் சிறிது அயர்ச்சி அளித்தாலும் அரைத்த மாவை அரைக்காமல் சிறந்த சிறுகதைக் (அல்லது நெடுங்கதைக் )கான , கருவை  எடுத்து நல்ல திரைப்படத்தைத் தந்துள்ளார், இயக்குனர் நெகஸ் நாசர்.

தனது தாயாரின் இதயச் சிகிச்சைக்குப் பணமின்றி , சாதாரண பல வேலைகளைச் செய்து கொண்டு பொருளாதார நெருக்கடியால் நண்பர்களிடம் வட்டிக்குப் பணம் வாங்கி அதை இழுத்தடித்துக் கொண்டு திருப்பி கொடுக்கும் ஒரு நபரும்,
பெரும் வசதி படைத்த ஒரு பணக்காரரின் மகன்,வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இன்றிக் குடிப்பழக்கத்தால் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு நபர், என இருவரும் சந்திக்கிறார்கள்.
கதையின் பிற்பகுதியில்
அந்த பணக்கார இளைஞரின் வாழ்க்கை அவரை ஏன், இப்படியான நபராக மாற்றி விட்டிருக்கிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வரும்போது ,நம்மிடம் வெறுப்பைச் சம்பாதித்த அந்த இளைஞனின் விட்டேத்தித் தனத்திற்கான நியாயம் புரிய வரும் மாற்றத்தினையும், இயக்குனரின் கதாபாத்திரத் தேர்வுகளுக்காகச் சிலாகிக்கலாம்.
இந்த இரு நபர்களும் இரண்டு நாட்கள்
இணைந்து பயணிக்கும் போது , அப் பயணம் பல ஆச்சர்யங்களை நமக்குத் தெளிக்கின்றது.
 தனது வருமானத்திற்குத் தகுந்தாற் போல் குடிப்பழக்கம் கொண்ட சுராஜ், குடித்துக்கொண்டே ...இருக்கும் நபரான ,ஆசிப்பிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் சந்தர்ப்பங்கள்,நம்மையும் நெளிய வைத்துக் கொண்டே போய்க்கொண்டிருக்கும். 

இவர்கள் ,திருவனந்தபுரம் ,ஆலப்புழா, எர்ணாகுளம் ,கொல்லம் ,எனத் தாறுமாறாக -  சுராஜை, ஆசிக், கிட்டத்தட்ட, இழுத்துக் கொண்டு
பயணிக்கும் போதான , நெடுகிலும் பல்வேறு கலவையான சம்பவங்கள். ,அவை,ஆரம்பத்தில் வெறுப்பேற்றினாலும், அவைகளும் பிறகு இந்தக் கதைக்குத் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகி , இந்தத் திரைக்கதையின் தேர்விற்கு வலுச்சேர்த்து , கூடுதலான நியாயமும் சேர்க்கின்றன.

வாழ்க்கையில் அவசிய தேவைக்குக் கூட பணமின்றித் தவிக்கும், ஆனாலும் நேர்மைத் தவற விரும்பாத ஒரு எளிய மனிதனின் கதாபாத்திரத்தை சுராஜ் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

ஆசிப் அலி ,ஏற்றுச் செய்த,பெரும் வசதி படைத்த இளைஞன் கதாபாத்திரம் ,பல்வேறு சமயத்தில் நமக்கு மகிழ்ச்சியையும், வெறுப்பையும் ,ஏற்படுத்த கூடியது ., இக் கதாபாத்திரத்தை ஏற்று,அதைத் திறம்படவே ,அவர் வெளிப்படுத்தியுள்ளமைக்காக, அவரும் பாராட்டுகுரியவரே! 

திரைப்படத்தின் இறுதி பகுதியில் பணக்கார இளைஞனைத் திருத்த அவர்கள் குடும்பம் எடுக்கும் முடிவுகளால், இவர்கள்இருவரும்
கால்பந்தாட்டத்தில் உதைபடும் பந்தினைப் போல மாறும் போது, கதை அயர்ச்சியைத் தந்தாலும், அதையும் மீறி புதிய கதைக் கலங்களையுடைய திரைப்படங்களைப் பார்க்க விரும்புவோருக்கு மட்டுமே,
இது ஒரு சிறந்த கதைப் படம்.!

No comments: