Saturday, April 30, 2016

பாஜி ராவ் மஸ்தானி.: திரைப்பார்வை - சாளரம் இதழிலிருந்து

பாஜிராவ் மஸ்தானி திரைப்படமும், வரலாறும்:

     பாஜிராவ் மஸ்தானி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியால், இயக்கப்பட்டு, அவராலே இசையமைக்கப்பட்டும் இப்போது வெளிவந்துள்ளது. இப்படம் தமிழில் இன்னமும் டப் செய்யப்படவில்லை. ஆனாலும் ஆங்கில சப்டைட்டிலுடன் படம் இருப்பதனால் ஒன்றிப்பார்க்க முடிகிறது. பாஜிராவ்வாக ரன்வீர் சிங்கும், மனைவி காசி பாய்யாக பிரியங்கா சோப்ராவும், மஸ்தானியாக தீபிகா படுகோனும், தங்களது நடிப்பாற்றலை அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
      பாஜிராவ் தனது இருபதாவது வயதில், மராட்டிய மன்னர் சாகுவால் பேஷ்வ்வாக நியமிக்கப்படுவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது.  பந்தல்கான் மன்னர் சந்திரசால், அவர்மீது பெரும்படை ( மொகல் படை) மோத வந்த போது, உதவி கேட்டு தனது மகள் மஸ்தானியை,  பாஜிராவை சந்திக்க அனுப்புகிறார். சிறந்த அழகியான மஸ்தானி சிறந்த போர் வீரங்கனையும் கூட.  போர்களத்தில் அவள் ஒரு  சுழன்று அடிக்கும் சூறாவளி.  சந்திரசால் மன்னருக்கும், பெர்சிய இஸ்லாமிய பெண் ரூகானிபாய்(நிஜாம் மன்னரிடம் ராஜ நர்த்தகியாக இருத்தவர்) என்ற ராணிக்கும் பிறந்தவர் மஸ்தானி. பாஜிராவ்விற்கு முதலில் சந்திரசால் மகாராஜாவிற்கு உதவ தயக்கம் இருப்பினும், மஸ்தானியை சந்தித்தவுடன், தயக்கம்  மறைந்து விடுகிறது. மொகல் தளபதியை போர்களத்தில் சந்தித்து வெற்றி கொள்கிறார். அந்த போரிலே மஸ்தானியின் போர் வீரத்தை கண்டு வியந்து போகிறார். ஒரு சந்தர்பத்தில் பாஜிராவ்வை, மறைந்திருந்து தாக்க வருபவனை மஸ்தானி வாளால் வீழ்த்துகிறார். போர்களத்தில் இவர்கள் இதயங்களும்  சந்திக்கின்றன,இரு இதயங்களும் இடம் மாறி விடுகின்றன. வெற்றியை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னர் சந்திரசால்  தனது மகள் மஸ்தானியை, பெரும் செல்வத்துடன் பாஜி ராவை,திருமணம் செய்து கொள்ள அனுப்பி வைக்கிறார்.
பாஜிராவுனுடைய தாய், ராதாபாய் வேற்று மத  பெண்ணை வெறுப்புடன் பார்க்கிறார். அதேபோல் பாஜிராவ் தம்பி சிம்னாஜிஅப்பா, மற்றும் பாஜிராவுனுடைய  இளம்சிறுவன் பாலாஜி, ஆகியோரும் மஸ்தானியை வெறுக்கிறார்கள். தனது தாயாரைப் போலவே சிறந்த நடனம் கற்ற மஸ்தானியை, நாட்டியக்காரி என்று அவமதிக்கவும் செய்கிறார்கள். இத்தகைய அவமதிப்புகளுக்கு எதிராக பாஜிராவ் தம் குடும்பத்தின் அனைவருடனும் சாந்தமாகவும், அவேசமாகவும் போராடுகிறார். ஒரு சில மாத இடைவெளியில் காசிபாய்க்கும், மஸ்தானிக்கும் குழந்தைகள் பிறக்கும் போது, மஸ்தானியின் குழந்தைக்கு இந்து பெயர் வைக்கவும் மறுக்கிறார்கள். எனவே பாஜிராவ் அக்குழந்தையை இஸ்லாமிய பெயரான சாம்சர் பகதூர் என்ற பெயரிட்டு வளர்க்கிறார், முதலில் புனேயிலும், பின்னர் கதூர்ரெட்டியிலும்(KOTHRUD), வசிக்கிறார் மஸ்தானி.
1740ல் பாஜிராவ் கார்கான்(KHARGON) பகுதிக்கு செல்ல நேர்ந்த போது, அங்கு அவர் விஷகாய்ச்சலால் பாதிக்கப்படுகிறார். அக்காலகட்டத்தில் மஸ்தானி பாலாஜி(நானா)யால் சிறைபடுத்தப்படுகிறார். விஷகாய்ச்சலில் இருக்கும்போதும், தனது மனைவி காசிபாய், தாயார் ராதாபாய் ஆகியோர்அருகில் இருத்தாலும் ,பாஜி ராவ் விழிகளும், வார்த்தைகளும் மஸ்தானி எங்கே என்று தேடுகின்றன. காய்ச்சல் முற்றி பாஜிராவ் மரணத்தை சந்திக்கும் வேளையில் தொலைதூரத்தில் சிறையில் இருக்கும்  மஸ்தானியின் உயிரும் பிரிகிறது.
பல நூரு வருடங்களாகவே பெருவாரியான மக்களின் தலையில் புகுந்து மதங்கள் ஆட்டி வைக்கின்றன. காதலோ மதம் கடந்து இதய பூர்வமாய்,காவியமாய்,  சாகவரம் பெற்று நிற்கிறது. பாஜி ராவ், மஸ்தானி வாழ்வைப் போல்!
     வரலாற்றில் ,பாஜிராவ் மராத்திய மன்னர்  சாகுவின் ( வீர சிவாஜியின் கொள்ளுப்பேரர்)அன்பிற்கு பாத்திரமான பெரும் தளபதி. 30க்கும் மேற்பட்ட போர்க்களங்களில் மொகலாயர்களை, நிஜாம் மன்னர் படையை, போர்த்துகீசிய படையை என சந்தித்து அத்தனையிலும் வென்று மராத்தியர்களின் புகழ் ஓங்க செய்தவர். பாஜிராவ், மஸ்தானி நிஜ வரலாற்று கதாபாத்திரங்கள், அவர்களின் அமர காதலை, மிக பிரம்மாண்டபான, போர்களக் காட்சிகள், பெரும் அரண்மனைகள் என ஹாலிவுட் படங்களுக்கு இணையான படமாக நம் இந்திய மக்களுக்கு கொடுத்து இருக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. இந்த திரைப்படம்இந்திய திரைத்துறைக்கு ஒரு புதிய மகுடம் என்றே குறிப்பிடலாம்.இதன் கதை மதவாதிகளுக்கு ஏற்புடையதாய் இருக்க போவதில்லை, ஆனால் அதை கடந்த ,பெரும்வாரியான நாம் பார்த்து கொண்டாடிய வேண்டிய படம் பாஜி ராவ் மஸ்தானி.

பி.கு: பாஜி ராவ் மஸ்தானி தமிழில் இணையத்தில் கிடைக்கிறது:www.Tamigun.com
இப்படம் சிறந்த இயக்கம், இசை, நடிப்பு ஆகிய பிரிவுகளில் பிலிம்பேர் 20 15 - 16க்கான விருதுகளைப் பெற்றுள்ளது.