Wednesday, November 16, 2016

"வதை தரும் அதீத உழைப்பை ஒழிப்போம்"

பாலம் 13.11. 16- காலையில்,நடைபெற்ற வாசகர் வட்ட நூல் அறிமுகம் ,நண்பர் அழகுராஜ் அவர்களின்
அருமையான புரிதல் தந்த அறிமுக உரையும், விவாதங்களும், நாம் அறியாத ',விவாதிக்காத புதிய விசயங்களை, வாசகர்கள் அனைவருக்கும் கொண்டு சென்றது.

உழைப்பை ஒழிப்போம் - இத் நூலின் ஆசிரியர்கள் இருவர் : பால் லஃபார்க் (மார்க்ஸின் இரண்டாவது மகள் லாராவின் கணவர் - மறைவு 1911) இரண்டாமவர் பாப் ப்ளாக் 1951-ல் பிறந்தவர். இவருடைய 1985-ல் எழுதிய கட்டுரையையும் கொண்டது இந்நூல்.
உண்மையில் இந்த நூல் சொல்வதெல்லாம் , மனிதஉழைப்பு, அதைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட பல்லாயிரம் ஆண்டு கால கற்பிதங்கள், நம்மை ஆட்சி செய்யும் மதங்களைப் போல் , நம் இயல்பையும், இந்த புவியையும் எப்படியெல்லாம் சீர்குழைத்திருக்கின்றது என சொல்லும், அற்புதமான படைப்பு ...
ஒரு மேலோட்டமான வாசிப்பிற்கு பிடிபடாத  விசயகணமிக்கது. ஆழ்ந்து வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது. தலைப்பு நம்மை மிரட்டினாலும், உண்மையில் இந்நூல் சொல்வது
"வதை தரும் அதீத உழைப்பை ஒழிப்போம்". நியாமான பலன் தரும் உழைப்பு மட்டுமே, மனிதன் செய்யத்தக்கது , உழைப்பைப் போல்,ஓய்வும் , கலை யும்,இன்ப நுகர்வும் ,நமது உரிமையே"என்பதே.

Tuesday, October 18, 2016

குணக்கேடு: சிறுகதை : சேகு



குணக்கேடு:
                                                                                         சிறுகதை : சேகு


     பூபதியிடத்தில் திருமண புகைப்பட ஆல்பத்தையும், சி.டியையும்
கொடுத்து விட்டு, மீதி பணத்தையும் போட்டோகிராபர் கடை ஊழியர் 
வாங்கிக் கொண்டு, எல்லாம் பிரம்மாதமாக வந்திருக்கிறது, என்று 
எங்க வேல்முருகன் சார் சொன்னார் சார் என்று சொல்லி விட்டு 
கிளம்பினான்.

     அவன் கொடுத்த பெரிய அழகான பையில், இரண்டு 
ஆல்பங்களும், இரண்டு சி.டிக்களும் அழகான கவர்களுடன் 
இருந்தன., உற்சாகத்துடன்  பூபதி வீட்டிற்குள் பையை எடுத்துச்
சென்றான். ஆல்பத்தைக் கண்டவுடன் குடும்பத்தினர் அனைவருக்கும்
உற்சாகம் தொற்றிக் கொண்டது. 
     
     ஆல்பத்தை பிரித்து பூபதி மனைவி சங்கீதாவும், பூபதியின் அம்மா
சுந்தரவள்ளியும், பூபதியின் 8 வயதுமகள் சுபிக் ஷாவும் ஒன்றாக 
உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தார்கள், கூடவே பூபதி அப்பா 
நவநீதமும் சேர்ந்து கொண்டார். அவரது செல்வமகள்  ராதிகாவின் 
திருமணத்தின் அழகிய  நிகழ்வுகள், மேலும் அழகாக 
புகைப்படங்களில் காட்சியளித்தது. மணமக்கள் தனித்தனியாகவும், 
இருவருமாகவும், உறவினர்களுடனும் என வண்ண மயமாக 
காட்சியளித்தது ஆல்பம். அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் 
எல்லோரும் சேர்ந்து இருக்கும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது 
கூடுதல்  சந்தோசமாக இருந்தது., புன்னகையும், மகிழ்ச்சியும், 
உற்சாக சிரிப்புமாக, வீடு கலை கட்டியது.

     பூபதி சி.டியை பிளேயரில் போட்டு ஹாலில் உள்ள பெரிய
எல்சிடி டிவியில் பார்க்க ஆரம்பித்தான்.சி.டி.ஓட ஆரம்பித்தபோது 
பூபதியின்  மனமும் திருமண வைபத்தை நோக்கிப் பயணித்தது.

     பூபதியின் அப்பா நவநீதம் திருப்பத்தூரில், சிறிய அளவில் நகை 
ஆசாரியாக, கடை ஒன்றை ஆரம்பித்தபோது அவர் திருமணம் கூட 
ஆகாத இளைஞராக இருந்தார். அவருடைய சிறிய கடையில் அவர் 
செய்யும், அழகிய டிசைன், தரம் இவற்றிர்க்காக படிப்படியாக
சுற்றுவட்டாரம் எங்கும்  அவருக்கு நகைத்தொழில் புகழ் சேர்த்துக் 
கொடுத்தது. அவருக்கு திருமணமாகியவுடன் சிறிது காலத்திலேயே
பூபதி பிறந்தான். நவநீதம், அவனுக்கு தனது தந்தை முத்துச்சாமி
நினைவாக முத்துச்சாமிபூபதி என்று பெயர் வைத்தார்.அவருடைய
சிறிய கடை, ஊரின் பிரதான கடை வீதிக்கு  இடம் பெயர்ந்தது. 
அவருக்கு அன்று பெரிய தொகை என்றாலும், சகாயவிலைக்குக் 
கிடைத்த சிறிய தார்சுகடையை விலைக்கு வாங்கி, முத்து 
ஜிவல்லர்ஸ் என்ற சொந்தமாகத் துவங்கினார்.

     பூபதிக்கு பிறகு, 11 வருடங்களுக்கு கழித்துத்தான் ராதிகா 
பிறந்தாள். எனவே ராதிகா வீட்டில் எல்லோருக்கும் செல்லம், 
அண்ணன் பூபதிக்கு ராதிகாவின் மீது அதிகம் பிரியம் . ராதிகாவை
குழந்தையாக இருந்த போது  தோளிலும், பிறகு மனதிலும் தூக்கி 
வைத்துக் கொண்டாடுவான். அப்பா, அம்மாவிற்கு சொல்லவே 
வேண்டியதில்லை, ராதிகா செல்ல மகளில்லை,  செல்வமகள், 
அவர்களுக்கு லெஷ்மியின் மறு உருவம்.பூபதி டிகிரி படித்தவுடன், 
அப்பாவுடைய கடைக்கு வந்து, எல்லாப் பொருப்புகளையும்  
கவனித்துக் கொண்டான் .அவன் பொருப்பாக கடையைக் கவனிக்க 
ஆரம்பித்த போது, சில வருடங்களிலேயே தொழில் அமோகமாக 
வளர்ந்தது,  கடையும் இரண்டடுக்கு மாடியாகப் புதுப்பிக்கப்பட்டு, 
கடையின் முன்பகுதியை அழகிய ஷோருமாகவும், நவநீதமும், 
பூபதியும் மாற்றியமைத்தனர். நவநீதத்தின் செல்வ வளம் 
அவருடைய கடை அழகிலும், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு, 
புதிதாகக் கட்டிய,  அவருடைய அழகிய பங்களா வீட்டிலும்
பளபளத்தது. 

     பூபதிக்கு சிறப்பான வகையில் திருமணம் நடத்தி வைத்தார்
நவநீதம்.  மருமகள் நல்ல படித்த பெண்ணாக, வசதியான 
குடும்பத்திலிருந்து எடுத்திருந்தார். மருமகள் சங்கீதாவும் கெட்டிக்காரி
ஆதலால், பெரும்பாலும் பாதி நேரமாவது நகைக் கடைக்குப் போய் 
ஒத்தாசை செய்வாள்.
 
     பூபதிக்கு தங்கை ராதிகா எப்படியோ அதே போல், ராதிகாவிற்கு
அண்ணன் மகள் சுமிக் ஷா செல்லம். ராதிகா படிப்பில் நல்ல 
கெட்டிக்காரி, அவள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து, பி.இ யிலும்
சிறப்பான மதிப்பெண்ணில் தேர்ச்சி அடைந்த போது, அவளுடைய 
அழகுக்கு, படிப்புக்கு ஏற்ற வகையில் மாப்பிள்ளையை தேர்வு 
செய்து வைக்க வேண்டுமென்ற முயற்சிக்கு,ஒரு சில 
மாதங்களிலேயே பலன் கிடைத்தது. பெரிய சம்பளத்தில் நல்ல 
மாப்பிள்ளை சேலத்து சம்பத்தப்புரம் என அமைந்தது. மகளுடைய 
திருமணத்தை நவநீதம் பிரம்மாண்டமாக நடத்தினார். பூபதிக்கு
அவனுடைய திருமணத்தை விட தங்கை திருமணத்தை, ஒரு படி
.மேலாக பெரும் விழாவாக கொண்டாடும் ஆசையிருந்தது.
 திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சிறப்பான முறையில் 
திட்டமிட்டு, மனமகன் வீட்டார் மெச்சும் வசம் செய்திருந்தான்.
நவநீதம் தனது ஒவ்வொரு பெரிய வாடிக்கையாரையும், விட்டுப்
போகாமல் அழைப்பு வைத்திருந்தார். இந்துக்களில் எல்லாத் 
தரப்பினரையும், ஏராளமான அவருடைய இஸ்லாமிய 
வாடிக்கையாளர்கள் எனவும், சுற்றி வர உள்ள எல்லா ஊர்களில் 
உள்ள அனைத்துத் தரப்பினரையும் அழைத்திருந்தார்.

     திருமண விழாவை அப்பா எதிர் பார்த்ததை விட பூபதி 
பிரம்மாதப்படுத்தியிருந்தான். காரைக்குடி பேமஸ் சமையல்காரர் 
மூர்த்தியினுடைய குரூப் அறுசுவை விருந்து, ஸ்வீட், ஐஸ்கிரீம்,
பாயாசம் என புக் பண்ணி முப்பது வெரைட்டி உள்ள சைவ 
உணவுகள் என, சாப்பிட்டவர்களை திக்குமுக்காட வைத்திருந்தான்.
மேடை அலங்காரம், விடியோ கவரேஜ் சிறப்பாக இருந்தது.

     திருமண நிகழ்வின் பிரம்மாதத்தில், ராதிகாவின் முகத்திலும்,
குடும்பத்தினர் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி முழுமையாக 
மின்னியது.

     அன்று புகைப்படங்களையும், ஹாலில் ஓடிய சி.டியைப் பார்க்கும்
போது, மீண்டும் அந்த மகிழ்ச்சி வந்து ஒட்டிக் கொண்டது.
நாளை வரப்போகும் ராதிகாவையும், மாப்பிள்ளை ரவியும்,
மாப்பிள்ளை வீட்டாரும், ஆல்பத்தை பார்க்கும் போது , ஆனந்தப் 
படுவார்கள் என்று நினைக்கும் போது பூபதி மனம் மலர்ந்தது.

     பூபதியின் கல்லூரி நண்பன் வேல்முருகன் திருமண 
வீடியோகிராபி செய்திருந்தான். புகைப்படமும் அவன் கம்பெனியே
செய்திருந்தது. வேல்முருகன் ஸ்டூடியோ காரைக்குடியில் புகழ் 
பெற்றிருந்தது. அவனே நேரில் தனது குரூப்புடன் திருமண 
கவரேஜை செய்திருந்தான்.  ராதிகாவின்  மாப்பிள்ளை வீட்டார் 
ஆல்பம், சி.டி-யை விட, நம் ஆல்பம், சி.டி சிறப்பாகவே நிச்சயம்
இருக்கும் என்றும் பூபதிக்கு நம்பிக்கையிருந்தது. பூபதியின் மன
ஓட்டத்தை தடை செய்தது சுபிக் ஷாவின் குரல்.  சுபிக் ஷா 
திடீரென்று "தாத்தா இந்தப் போட்டாவில், காணப் போன 
பட்டுப்புடவை" என்று சத்தமாகச் சொல்லி தாத்தாவிடம் 
காண்பித்தாள். சீர்வரிசையை எடுத்த போட்டாவில் அந்த 
பட்டுப்புடவை பளபளத்தது.நல்ல இளம் ஊதா கலர் பட்டுப்புடவை,
ராதிகாவிற்கு வாங்கிய மூன்று பட்டுப்புடவையில் திருமணப் 
பட்டுக்கு அடுத்தப் படியாக, ராதிகா பிரியப்பட்டு வாங்கிய புடவை
அது, தங்கச்சரிகைவேலைபாடுடன் புது டிசைனாக வந்திருந்தது, 
தள்ளுபடி போக திருபுவனத்தில் வாங்கியது விலை 24,000 ரூபாய். 
திருமண வரவேற்பில்  சீர்வரிசையை மாப்பிள்ளை வீட்டார் 
பார்வையிடவும், உறவினர் பார்க்கவும் தனி அறையில் 
சீர்வரிசையுடன் பட்டுப்புடவைகளை தட்டில் தனித்தனியாக பிரித்து 
வைத்திருத்தார்கள். கொஞ்ச நேரத்தில அந்த இள ஊதா பட்டுப்புடவை திருட்டு போயிருந்தது. அது எப்படி திருடு 
போனது என்ற கவலையிலும், அதை நவநீதம் குடும்பத்தார் அந்த
விசேச நிகழ்வில், கும்பலில் வெளியே தெரியாமல் பார்த்துக் 
கொள்ள வேண்டியும் இருந்தது. திருமணத்தில் ஒரு கரும்புள்ளியாக 
அதை யாராலும் மறக்க முடியவில்லை, குடும்பத்தினருக்கு 
மட்டுமே ஏற்பட்ட மனக்கஷ்டமாகவும் அந்த சம்பவம் அமைந்தது.
அன்றே வேறு ஒரு பட்டுப்புடவையை ,அவசரமாக உள்ளூரில் 
வாங்கி வந்து பூபதி மறுநாளில் சிர் வரிசையில் 
வைத்திருந்ததையும், பூபதி சிரமப்பட்டு அச்சம்பவத்தை மறக்கவே 
நினைத்திருந்தான். .

     சுமிக் ஷாவின் நினைவூட்டலால் நவநீதத்தின் முகம் வாடியது,
பூபதியின் முகமும் தான். அழகிய முகத்தில் உள்ள கரும்புள்ளி 
மாதிரியான அந்த நிகழ்வை அனைவரும் மறக்கத்தான் 
நினைத்திந்தார்கள். நவநீதத்தின் முகவாட்டத்தைக் கண்ட பிறகு
ஆல்பத்தைப் பார்ப்பவர்களின் குரல் சற்று சுருதி குறைந்திருதது. 
 பூபதியும் ஏரக்குறைய அதே மனநிலையில் சிடியைப் பார்க்க 
ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தில் சீர்வரிசைக் காட்சி வீடியோவில்
வந்த போது உன்னிப்பாகப் அந்தப் பட்டுப்புடவைத் தட்டை உற்றுப்
 பார்த்தான். அப்படியே அந்த அறையிலிந்து வீடியோ நகர்ந்த போது,
சீர்வரிசையைப் பார்த்தவர்கள் அனைவரும் வெளியே போனதையும் 
கவனித்தான், கேமரா வெளியே நகர்ந்த போது, கடைசியாக ஒரு 
புர்கா போட்ட முஸ்லீம் பெண், நடுத்தர வயதிருக்கும் பெண் 
சீர்வரிசையை பார்க்க உள்ளே வந்தவள் எல்லோரும் வெளியேறிய
பின் நிற்கும் காட்சியோடு, கேமரா சிறிது சிறிதாக நகர்ந்து, அந்த 
அறைக்கு வெளிப்புறம் வந்து பார்வையாளர்களை நோக்கிய போது, 
வீடியோவின் ஒரு மூலையில் அந்த அறையின் கதவு திறப்பு 
மட்டும் தெரிந்தது. உற்றுப் பார்த்தால் கதவு திறப்பின் வழியாக
சீர்வரிசையில் வைத்திருந்த டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி 
தெரிந்தது. அதில் சில விநாடி சலனம் தெரிந்தது, பிறகு கேமரா 
நகர்வில் அந்தப் புர்காபெண்  வெளியே வருவது ஒரு விநாடி 
தெரிந்தது.  பிறகு கேமரா வேறு வேறு திசையில் திருமணத்தைக்
கவர் செய்து  கொண்டே போனது. பூபதிக்கு ஏதோ எச்சரிக்கை 
உணர்வு தோன்ற, வீடியோவின் நேரத்தைக் கவனித்தான்.
சட்டென்று பொறி தட்டியது போல், அந்த மூன்று நிமிடக்
காட்சியைப் பார்க்க, ரிவைண்ட் செய்தான், திரும்பவும் அதே
காட்சிகள், இந்த முறை கதவிடுக்கில் தெரிந்த டிரஸ்டிங் டேபிள் 
கண்ணாடியின் சலனத்தை மறுபடு பார்த்தான் , ஒன்றும் தெளிவாக 
மட்டுப்படவில்லை. மறுபடியும் ரீவைண்ட் செய்து ஸ்லோமோசனில்
பார்த்தான். டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை மட்டும் ஜூம் செய்து 
பார்த்தான். ஒரே விநாடியில் தெரிந்த அந்த காட்சியில், அந்த புர்கா 
பெண் குனிவதும், பட்டுப்புடவையை மடித்து லாவகமாக
புர்க்காவிற்குள் மறைப்பதையும், பிறகு வெளியே வருவதும் 
தெரிந்தது. அந்தப் பெண் முகத்தை ஜூம் செய்து பார்த்த போது 
தெரிந்தது, அந்தப் பெண் யாரென்று,  நிறைய நகைகளுடன் 
காட்சியளித்தாள் அவள், அவனுக்கு அவளை யார் என்று தெரிந்து 
விட்டது. அவர்கள் கடைக்கு அடிக்கடி நகைகள் செய்ய வரும் சவுதி
வாப்பாவின் மனைவி தான் அவள்.
 
     பூபதி படபடப்புடன், "அப்பா இங்கே வந்து பாருங்க" என்று உரத்த
குரலில் நவநீதத்தை அழைத்தான். நவநீதம் புகைப்படங்களை 
பார்த்துக் கொண்டிருந்தவர், பூபதியின் பரபரக்கும் குரலால் எழுந்து 
வந்தார். திரும்ப அந்தக் காட்சிகளை, அவன் பார்த்த முறையிலேயே
ஜூம் செய்து அவளுடைய புடவைத் திருட்டை, ஸ்லோமோசனில்
காண்பித்தான். நவநீதம் கவனித்துப் பார்த்தவுடன் துணுக்குற்றார். 
பூபதி சற்று கோபமாக , நவநீத்தைப் பார்த்து "பாருங்கப்பா, அந்தப் 
பணக்காரியின் சின்ன புத்தியை" என்று சினத்துடன் சொன்னான்.
"இவளை போலீசில் பிடித்துக் கொடுக்கனும் பா" என்று சீறினான்.

     நவநீதம் சலனமற்று சில விநாடிகள் நின்றார். பிறகு பூபதி பக்கம்
திரும்பி "அவளைத் தெரியுமப்பா, சவுதி வாப்பா சம்சாரம் 
சுலையா பீவி தான் அவள் என்றவர். சற்று நிதானித்து, கண்களை 
மூடித் திறந்துவிட்டு சொன்னார், அந்த சுலையா பீவி நல்ல
பணக்காரர் பெண், அவளுடைய இரண்டு மகள்களுக்கும் 
நூற்றுக்கணக்கான பவுன்நகைகள் செய்து வாங்கியிருக்கிறாள்.
இப்போது சவுதியில் வேலை செய்யும் அவளுடைய இரண்டு 
மகன்களும் இன்ஜினியர்களாக பெரிய வசதியுடன் இருக்கிறார்கள்,
அவர்களுடைய மனைவிக்கும் இவள் தான் ஏராளமான 
நகைகள்செய்துநம்மிடம் வாங்கியிருக்கிறாள், அவளுடைய 
சொந்தக்காரர்கள் பலருக்கும் நம்மிடம் அழைத்து வந்து நிறைய
நகைகள் செய்திருக்கிறாள். இந்தப்பட்டுப்புடவை தொகயைவிட 
பலமடங்கு லாபம் நமக்கு சுலையா பீவி மூலம் வந்துள்ளது. 
அது மட்டுமல்ல ஊரில் பெருவாரியான முஸ்லிம் மக்களும்
நம்முடைய வாடிக்கையாளர்கள் என்று சொன்னவர். சற்று 
உறுதியான குரலில் "அவளுடைய தரத்திற்கு உள்ள செயலை 
அவள் செய்யவில்லையம்பா, ஆனால் அவளுடைய இந்தப் 
பட்டுப்புடவை திருட்டு அவளது சில்லறை திருட்டுப் புத்தியைக் 
காட்டினாலும், இதைக் காட்டிக் கொடுப்பதால், அவள் சார்ந்த 
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அவமானம் தான். 
அதனால், இந்த விசயத்தை யாருக்கும் தெரியாமல் விடுவதே 
நமக்கும், நம் வியாபாரத்திற்கும் அழகு. திருடுவது என்பது ஒரு 
குணக்கேடு, அது ஏழைகள் மட்டும் செய்வதாக நாம் நினைக்கிறோம், 
ஜாதி, மத பேதமில்லாமல் பலருக்கும் இந்த குணக்கேடு இருக்கும்.
அந்த வியாதி வசதியானவர்களுக்கும் வரக்கூடியதே, அவர்கள் 
தானாக ஒரு சந்தர்பத்தில் உணர்வார்கள்,இதோடு இதை விட்டு விடு 
பூபதி," என்றார். குடும்பத்தினரும் அதை புரிந்து கொண்ட 
மெளனத்தில் இருந்தார்கள்.

     பூபதி, நவநீதத்தின் வார்த்தையில் உள்ள பொருளைப் புரிந்து 
கொண்டபடியால், சில விநாடிகள் மௌனத்திற்கு பிறகு, அப்பா
சொல்வதே சரி என்று அவன் மனமும் சொன்னது, அமைதியாக
நவநீதத்தைப் பார்த்து "சரிப்பா" என்றான்.

Friday, August 12, 2016


                                      

            நூல் ஆய்வு: சேகு,   நூல் ஆசிரியர்: இலா.வின்சென்ட்,
            வெளியீடு  :பாரதி புத்தகாலயம்விலை:90/, பக்கங்கள்: 128

               சேலத்து எழுத்தாளர் இலா. வின்சென்ட் அவர்களுடைய இருட்டைத்  தின்றவர்கள் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் அனுபவம் அலாதியானது. இக்கதைகள் அத்தனையும் சேலம் சார்ந்த பகுதிகளில் நடப்பதாக அமைந்துள்ளதானது, இன்னும் சிறப்பைக் கூட்டுகிறது. இலா.வின்சென்ட் சிறுகதைகள்,கட்டுரைகள்ஆய்வு நூல்கள் எனப் பல நூல்களை எழுதியவர். சேலம் த.மு.எ.க.சாவின் சாளரம் சிற்றிதழில் பொறுப்பாசிரியர். அந்த வகையில் அவருடைய அனுபவ நடைஇந்த நூலில் உள்ள சிறுகதைகளில் சிறப்பாக வந்திருக்கிறது. சிறுகதைக்கான களமும் சமூகத்தின்,எதார்த்தமானஅடிதட்டு மக்களுடைய பிரச்சனைகளைப் பேசுகின்றபடியால் இதில் உள்ள 12 கதைகளும்ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் நமது மனத்தை ஊடுருகின்றன. இந்த  கதைகளில் பல்வேறு சமயங்களில் பல்வேறு இதழ்களில் பிரசுரமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

             விதைகள் உறங்காது என்னும் சிறுகதை நம் சுதந்திர இந்தியாவின் முதல் அரசு பயங்கரவாதத்தைசேலம் சிறையில் நிராயுதபாணியான கம்யூனிஸ்ட் தோழர்கள் 22பேரைஅரசியல் கைதிகளுக்கான உரிமையைக் கோரியதற்காக, சிறைத்துறை காட்டுமிராட்டிதனமாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்தி படுகொலை செய்ததன் பின்னணியில் நிகழ்வதாக  படைக்கப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  மருந்து எனும் சிறுகதை துப்புரவுத் தொழிலாளிகள் மனித மலத்தை சுத்தம் செய்வர்களாக்கப்பட்டுமனித உரிமை மறுக்கப்பட்டர்வளாகிய அவல  சூழலில் வாழும் சீரங்கனுக்கும்இத்தொழிலை வெறுக்கும்,சிறுமகள் கலையரசிக்குமான மனக்குமுறலை மையமாக வைத்துநம் மனதில் குமுறலை ஏற்படுத்துகிறது.

           இலக்கணம் மாறுதோ எனும் சிறுகதை இறைவழிப்பாதையில் ஈடுபட்டும்மேரி எனும் எளிய ஆசிரியை தனது சுயநலத்திற்காக வேலையை விட்டு துரத்திடத் துடிக்கும் அமலா எனும் அருள் சாகோதரினுடைய, மோசமான மறுபக்கத்தைக் காட்டுகிறதுஇந்தப் போரட்டத்தில் அடக்கு முறைக்கு உள்ளாகி இறுதியில் பொங்கி எழுந்து போராடும் மனுஷியாக நம் மனதில் ஆசிரியை மேரி உயர்ந்து நிற்கிறார்.

          இருட்டைத் தின்றவர்கள் சிறுகதை ஒரு காலனியில் வசிக்கும் எளியவர்களுடைய நிலத்தைவீடுகளைத் தட்டி பறிக்கும் அரசியல் சூழ்ச்சியையும்அடக்குமுறையையும் நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. விசாரணைக் கூண்டு சிறுகதை ஒரு பெண்ணின் மீது கணவனின் குடும்பம் நிகழ்த்தும் குடும்ப வன்முறையையும்அப்பெண்ணுடைய பலவிதமான கேள்விகளையும்,மனக்குமுறல்களையும் பேசுகிறது. ஒதுக்கல் எனும் சிறுகதை ஜாதி மறுப்பு திருமணம் செய்த தலித் பெண்ணுக்குமேல்ஜாதி கணவனுடைய வீட்டார்அவன் இறந்த ஈம சடங்களிலும் அவனுடைய சிறுவயது மகன்மீது காட்டும் ஆதிக்க வெறியைச் சொல்கிறது.  என்று தணியும் எனும் சிறுகதை ஒரு இஸ்லாமிய பெண்ணின் அவலத்தை,  சதி திட்டம் தீட்டி மாமியாக்காரி,மருமகளைப் பலிவாக்குவதற்காக நடத்தும் தலாக் நாடகமும் அதிலிருந்து கணவனை மீட்டுவரும் இளம்பெண் ஆயிஷாவின் போராட்டத்தைச் சொல்வதுடன், அடிதட்டு இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையையும் நம்முன் கொண்டு வருகிறது.

          மண்கரடு சிறுகதை இணக்கமாக வாழும் இந்துமுஸ்லீம் மக்களிடையே மதவாதிகள் தூவும் நச்சு விதைகளைச் சுட்டிக் காட்டுகிறது. கைநழுவி போனது எனும் சிறுகதை தன் கணவனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி, சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற இலட்சியத்தால் தனி ஒருத்தியாக நின்று புதிய வீட்டைக் கட்டி முடிக்கும் இளம்பெண் மல்லிகாவினுடைய,பொறுப்புணர்ச்சியையும் அதற்காக அவள் இழந்த நிம்மதியையும்வலியையும்வெளிநாடு சென்று வேலை செய்து பிழைப்பவர்கள்சமூக அந்தஸ்து உயர்ந்தாலும்அவர்கள் தொலைத்த வாழ்க்கையையும் சொல்கிறது.
   
       இத்தகைய பல உறவுகள் நமக்கும் வாய்த்து இருப்பதால், நம் மனமும் கனத்து போகிறது. இது தவிர்த்து ஒவ்வொரு சிறுகதையும் ஒரு போராட்டத்தைவைராக்யத்தை நம்முன் நிறுத்துவதாகவும்,  இருப்பதால்அனைத்து சிறுகதைகளும் நம்மை ஆட்கொள்கின்றன.  நூலாசிரியரின் அற்புதப் படைப்பாற்றல்,ஒவ்வொரு சிறுகதையிலும் நம் மனக்கண்ணில் காட்சிகளாககேள்விகளாக, இன்னும் சொல்லப்போனால் இந்தக் கதை மாந்தர்களுடன் நெருக்கமனவர்களாக நம்மை கொண்டு வருவதில்  நூலாசிரியர் இலா.வின்சென்ட்  வெற்றியடைகிறார். இந்தச் சிறுகதை தொகுப்பு நிச்சயமாக வாசகனுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பதனால், இந்நூல் வாசிக்கப்படவேண்டிய ஒரு நல்ல  சிறுகதைத் தொகுப்பாக நான் கருதுகிறேன்.

Wednesday, June 15, 2016

தக்காளி அரசியல் :

தக்காளி அரசியல் :
வின்னில் இருபது செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் செலுத்தும் வல்லமை பெற்றுவிட்டோம். எந்த நாட்டிற்கும் இளைத்தவரில்லை 
நாம் என்று மார்தட்டுகிறோம்.,,

தக்காளி விலை சரியும் போது
விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்'...
விலை உச்சத்தை எட்டும் போது மக்கள்
கையறு நிலையில் இருக்கின்றனர்.. .( எல்லா விளை பொருள்களும் இதில் அடக்கம் )

ஒரே நாளில் பல கோடி பேருக்கு டிக்கட் தரும் இரயில்வே நெட்வொர்க் சரியாகவே செயல்படுகிறது!
ஆனால் வாடும் விவசாயிகளையும், வதைபடும் மக்களையும் காப்பாற்ற
எந்த நெட்ஒர்க்கும், எந்த அரசும் அமைக்க வில்லை!
அமைச்சர் சொல்கிறார். " சில மாதங்கள் விலை ஏறி, பிறகு சரிந்து தானே சரியாகிவிடுமாம் இந்த பிரச்சனை!
பிறகு எதற்கு ஓட்டு கேட்கும் போது : விவசாயிகளுக்கான, சாதாரன மக்களுக்கான ஜனநாயகம் தருவோம் எனும் வாக்குறுதி வாய்ஜாலம் ! மகாமந்திரிகளே!

உங்கள் வெளிநாட்டு விமான பயணத்தில், உடன் அழைத்துச் செல்லும் மகா வணிகர்களுக்கு மட்டும் தானே ! உங்கள் ராஜ்யம் ...

Saturday, April 30, 2016

பாஜி ராவ் மஸ்தானி.: திரைப்பார்வை - சாளரம் இதழிலிருந்து

பாஜிராவ் மஸ்தானி திரைப்படமும், வரலாறும்:

     பாஜிராவ் மஸ்தானி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியால், இயக்கப்பட்டு, அவராலே இசையமைக்கப்பட்டும் இப்போது வெளிவந்துள்ளது. இப்படம் தமிழில் இன்னமும் டப் செய்யப்படவில்லை. ஆனாலும் ஆங்கில சப்டைட்டிலுடன் படம் இருப்பதனால் ஒன்றிப்பார்க்க முடிகிறது. பாஜிராவ்வாக ரன்வீர் சிங்கும், மனைவி காசி பாய்யாக பிரியங்கா சோப்ராவும், மஸ்தானியாக தீபிகா படுகோனும், தங்களது நடிப்பாற்றலை அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
      பாஜிராவ் தனது இருபதாவது வயதில், மராட்டிய மன்னர் சாகுவால் பேஷ்வ்வாக நியமிக்கப்படுவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது.  பந்தல்கான் மன்னர் சந்திரசால், அவர்மீது பெரும்படை ( மொகல் படை) மோத வந்த போது, உதவி கேட்டு தனது மகள் மஸ்தானியை,  பாஜிராவை சந்திக்க அனுப்புகிறார். சிறந்த அழகியான மஸ்தானி சிறந்த போர் வீரங்கனையும் கூட.  போர்களத்தில் அவள் ஒரு  சுழன்று அடிக்கும் சூறாவளி.  சந்திரசால் மன்னருக்கும், பெர்சிய இஸ்லாமிய பெண் ரூகானிபாய்(நிஜாம் மன்னரிடம் ராஜ நர்த்தகியாக இருத்தவர்) என்ற ராணிக்கும் பிறந்தவர் மஸ்தானி. பாஜிராவ்விற்கு முதலில் சந்திரசால் மகாராஜாவிற்கு உதவ தயக்கம் இருப்பினும், மஸ்தானியை சந்தித்தவுடன், தயக்கம்  மறைந்து விடுகிறது. மொகல் தளபதியை போர்களத்தில் சந்தித்து வெற்றி கொள்கிறார். அந்த போரிலே மஸ்தானியின் போர் வீரத்தை கண்டு வியந்து போகிறார். ஒரு சந்தர்பத்தில் பாஜிராவ்வை, மறைந்திருந்து தாக்க வருபவனை மஸ்தானி வாளால் வீழ்த்துகிறார். போர்களத்தில் இவர்கள் இதயங்களும்  சந்திக்கின்றன,இரு இதயங்களும் இடம் மாறி விடுகின்றன. வெற்றியை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னர் சந்திரசால்  தனது மகள் மஸ்தானியை, பெரும் செல்வத்துடன் பாஜி ராவை,திருமணம் செய்து கொள்ள அனுப்பி வைக்கிறார்.
பாஜிராவுனுடைய தாய், ராதாபாய் வேற்று மத  பெண்ணை வெறுப்புடன் பார்க்கிறார். அதேபோல் பாஜிராவ் தம்பி சிம்னாஜிஅப்பா, மற்றும் பாஜிராவுனுடைய  இளம்சிறுவன் பாலாஜி, ஆகியோரும் மஸ்தானியை வெறுக்கிறார்கள். தனது தாயாரைப் போலவே சிறந்த நடனம் கற்ற மஸ்தானியை, நாட்டியக்காரி என்று அவமதிக்கவும் செய்கிறார்கள். இத்தகைய அவமதிப்புகளுக்கு எதிராக பாஜிராவ் தம் குடும்பத்தின் அனைவருடனும் சாந்தமாகவும், அவேசமாகவும் போராடுகிறார். ஒரு சில மாத இடைவெளியில் காசிபாய்க்கும், மஸ்தானிக்கும் குழந்தைகள் பிறக்கும் போது, மஸ்தானியின் குழந்தைக்கு இந்து பெயர் வைக்கவும் மறுக்கிறார்கள். எனவே பாஜிராவ் அக்குழந்தையை இஸ்லாமிய பெயரான சாம்சர் பகதூர் என்ற பெயரிட்டு வளர்க்கிறார், முதலில் புனேயிலும், பின்னர் கதூர்ரெட்டியிலும்(KOTHRUD), வசிக்கிறார் மஸ்தானி.
1740ல் பாஜிராவ் கார்கான்(KHARGON) பகுதிக்கு செல்ல நேர்ந்த போது, அங்கு அவர் விஷகாய்ச்சலால் பாதிக்கப்படுகிறார். அக்காலகட்டத்தில் மஸ்தானி பாலாஜி(நானா)யால் சிறைபடுத்தப்படுகிறார். விஷகாய்ச்சலில் இருக்கும்போதும், தனது மனைவி காசிபாய், தாயார் ராதாபாய் ஆகியோர்அருகில் இருத்தாலும் ,பாஜி ராவ் விழிகளும், வார்த்தைகளும் மஸ்தானி எங்கே என்று தேடுகின்றன. காய்ச்சல் முற்றி பாஜிராவ் மரணத்தை சந்திக்கும் வேளையில் தொலைதூரத்தில் சிறையில் இருக்கும்  மஸ்தானியின் உயிரும் பிரிகிறது.
பல நூரு வருடங்களாகவே பெருவாரியான மக்களின் தலையில் புகுந்து மதங்கள் ஆட்டி வைக்கின்றன. காதலோ மதம் கடந்து இதய பூர்வமாய்,காவியமாய்,  சாகவரம் பெற்று நிற்கிறது. பாஜி ராவ், மஸ்தானி வாழ்வைப் போல்!
     வரலாற்றில் ,பாஜிராவ் மராத்திய மன்னர்  சாகுவின் ( வீர சிவாஜியின் கொள்ளுப்பேரர்)அன்பிற்கு பாத்திரமான பெரும் தளபதி. 30க்கும் மேற்பட்ட போர்க்களங்களில் மொகலாயர்களை, நிஜாம் மன்னர் படையை, போர்த்துகீசிய படையை என சந்தித்து அத்தனையிலும் வென்று மராத்தியர்களின் புகழ் ஓங்க செய்தவர். பாஜிராவ், மஸ்தானி நிஜ வரலாற்று கதாபாத்திரங்கள், அவர்களின் அமர காதலை, மிக பிரம்மாண்டபான, போர்களக் காட்சிகள், பெரும் அரண்மனைகள் என ஹாலிவுட் படங்களுக்கு இணையான படமாக நம் இந்திய மக்களுக்கு கொடுத்து இருக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. இந்த திரைப்படம்இந்திய திரைத்துறைக்கு ஒரு புதிய மகுடம் என்றே குறிப்பிடலாம்.இதன் கதை மதவாதிகளுக்கு ஏற்புடையதாய் இருக்க போவதில்லை, ஆனால் அதை கடந்த ,பெரும்வாரியான நாம் பார்த்து கொண்டாடிய வேண்டிய படம் பாஜி ராவ் மஸ்தானி.

பி.கு: பாஜி ராவ் மஸ்தானி தமிழில் இணையத்தில் கிடைக்கிறது:www.Tamigun.com
இப்படம் சிறந்த இயக்கம், இசை, நடிப்பு ஆகிய பிரிவுகளில் பிலிம்பேர் 20 15 - 16க்கான விருதுகளைப் பெற்றுள்ளது.

Monday, March 07, 2016

பங்கு சந்தை வீழ்ச்சியும், இன்டர்நெட் செக்ஸ் டாக்டரும்.

                        பங்கு சந்தை வீழ்ச்சியும்இன்டர்நெட் செக்ஸ் டாக்டரும்.
      பங்குச்சந்தை சற்று மேலே போகிறது,  இல்லாவிட்டால் படுவீழ்ச்சியை மீண்டும் சந்திக்கிறது. இப்படியாக .,2015ல் இந்திய பங்குச் சந்தை இரண்டு இலட்சம் கோடிக்கு மேலும் சீனபங்குச்சந்தை ஏழு இலட்சம் கோடியும் வீழ்ச்சியடைந்தது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இதில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது சிறுமுதலீட்டாளர்கள்தான் இப்போதும்
- - - - - - - - - =------------
      
 2001ம் ஆண்டு ,என்று நினைக்கிறேன்,என்னுடைய அத்தை பெண்ணுடைய கணவர்,ஆர்த்தோ எம்.எஸ்மருத்துவக் கல்லூரி பேராசிரியர். ஒரு குடும்ப நிகழ்ச்சியில்அவர் என்னிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்த தருணத்தில்என்னிடம் இதை கேட்டப்போது திடுக்கிட்டு போனேன். அவர்
கேட்ட கேள்வி " நீ இன்டர்நெட் செக்ஸ் டாக்டரிடம் ஏமாந்து விட்டாய் "என்று சொன்னதுதான். ஒருவினாடியில் மனதில் பல விஷயங்கள் ஓடின. நான் சாதாரண செக்ஸ் சித்த வைத்தியரிடம்,லேகியம் கூட வாங்கி சாப்பிட்டதில்லையே! இந்த போடு போட்டுவிட்டாரே!இன்டர்நெட் செக்ஸ் டாக்டருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?. பேப்பரில் இ.செ. டா வுடைய லீலைகள் அரங்கேரிக்கொண்டிருந்த காலம் அது. இந்தியாவிற்கே புதுமையான ஒரு செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் டாக்டர் பிரகாஷ். அவர்இன்டர்நெட் வந்த புதிதான அந்த காலத்தில்,இங்கிருந்தும் அதை வேறுவிதமாக பயன்படுத்த முடியும் என்று நம்பிக்கையில்இருந்திருக்கிறார்..இந்தியாவிலிருந்து ஆபாசப் படங்களை எடுத்து வெளிநாட்டிலிருந்த ஒருவர் மூலம் பதிவேற்றி நம் நாட்டிலிருந்து ,புது மாதிரியான சேட்டையை (சேவையை!) செய்ய ஆரம்பித்திருக்கிறார். 
      அதோடு அந்த புகார்களால்போலீஸாரின் கடும் விசாரணையின் பின்னனியில்அவருடைய விஷயம் (விஷமம்!) அப்போதைய பத்திரிகைகளில்முழுமையாக ஆக்கிரமத்துக் கொண்டது.நீன்ட விசாரனைக்குப் பின்,நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் 'வேறு சில குற்றங்களுக்காக இன்னும் சிலஆண்டு சிறை தண்டனையும் அளித்தது.,சிறைச்சாலை அவரை ஆவலுடன் விழுங்கிக் கொண்டது.
      தினசரி நாளிதழ்களில் வந்த அவருடைய் ஆடம்பர பங்களாக்கள்சொகுசு பங்களாக்கள்,ஆபாச அபத்தங்கள் பலாத்காரங்கள்பற்றி செய்திகள் ஒரு வழியாக கால வெள்ளத்தில்,மறைந்தது..
        சரி இவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?.மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் போல?!என்ற வினாவிற்குஎன் உறவினரான டாக்டர்,சிறுபுன்னகையுடன்என்னிடம் சொன்னவிஷயங்கள்ஆச்சர்யக்குறியாக நிமர்த்தியும்கேள்விக்குறியாக ,வளைத்துமிட்டன. டாக்டர் பிரகாஷ் ஒரு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட்!(எலும்பு சிகிச்சை மருத்துவ நிபுணர்).அந்த வகையில்,அவரைஎங்கள் டாக்டர்அறிந்திருந்தார்.ஆனால் கூடுதலாக ஒருவிஷயத்தையும் அவர்எனக்குவெளிச்சமாக்கினார். வருடத்திற்கு முன்பு,நான்பங்கு சந்தையில்இன்னோவேசன் மெடி எனும் நிறுவனத்தில்சிறு அளவில் முதலீடு செய்திருந்ததை அவரிடம் சொல்லியிருந்தேன்,ஹர்சத் மேத்தா ஊதிப் பெரிதாகி இருந்த நேரத்தில் ,நான் இன்னோவேசன் மெடி என்ற ஒரு மருத்துவ சாதனங்கள் விற்கும் கம்பெனியில்மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்று,எனக்கு தெரிந்த பங்குச்சந்தை நிபுணர்! சிபாரிசு செய்தார்.(என்னிலும்,இளையவர்,அவரும் இந்த துறைக்கு புதியவரே ) அவர்அந்தநிறுவனம்,இந்தியாவில்,வீனமுறையில்,விலையுயர்ந்தஸ்டீலில்,புதிதாகபந்துகிண்ணமூட்டுதயாரிக்கும் நிறுவனம் பெரும்லாபத்துடன் செயல்படுத்த போவதாகவும்முதலீட்டிற்கு 200சதவிகிதம் லாபம்  கிடைக்கும் எனவும்,அதன் நிறுவனர் பேட்டியில்  சொன்னதைஎனக்கு தெரிவித்தார். நான் அதை உறுதிபடுத்திக் கொள்ள பங்குச்சந்தை குறித்து வரும் மாத இதழில்அந்த கம்பீரமான மனிதரின் பேட்டியை படித்து உறுதிபடுத்திக் கொண்டேன்!?.பங்குச்சந்தை ஏஜன்டும் நானும் தலா 200பங்குகள்வாங்கினோம். ஒரு பங்கு 52 அளவில்
ரூ.10,800 முதலீடு செய்தேன்.  அப்போது என்னிடம் உபரி சேமிப்பாக இருந்த முழுதொகையே அவ்வளவுதான்!
        பிறகு பங்குச்சந்தை மெகா சரிவுஹர்சத் மேத்தாவால் ஆரம்பிக்கப்பட்டதுஊதிப்பெருத்த அந்த பெரிய ராட்சஸ பலூன் வெடித்துச் சிதறியது.
       எங்களுடைய பங்கும் லிஸ்டில் இருந்து காணாமல் போய்விட்ட  கொடுமையும் நிகழ்ந்தது. இன்றைய மதிப்பில் சொன்னால்எனக்கு சுமார்ரூ.50,000 நட்டம்.
      எங்கள் உறவினர் மருத்துவர்இந்தக்கதையை சொன்ன பிறகு அந்தக் கம்பெனி பங்கையும்அதன் டைரக்டர்கம்பெனி புரபைல் புத்தகத்தைபுரட்டினேன். இரண்டாம் பக்கத்தில்,கம்பீரமாக சிரித்துக் கொண்டிருந்தஅந்த கனவினைப்  பார்த்தேன். பத்திரிக்கை செய்தியில் பரபரத்த அதே ஆள்தான்டாக்டர்  பிரகாஷ்தான்!. டாக்டர் பிரகாஷ்தனது  கம்பெனியை பங்குச்சந்தையில்ஹர்சத் மேத்தாவைபோல ஊதிப்  பெருக்கும் கலையைக் கற்றுபங்கு மதிப்பை ரூ. 52 ஆக(முக  மதிப்பு ரூ.10) ஊதிப் பெரிதாக்கிபலரிடம் கிடைத்த பணத்தில் ஒரு குறுநில மன்னரைப் போல் வாழ்ந்திருக்கிறார். எனது  உறவினரான மருத்துவ பேராசிரியர் ,சொன்னது
உண்மைதானே! எப்படியோ எனது பங்கிற்கு!,நானும்  ஏமாற்றப்பட்டிருக்கிறேன்!
      டாக்டர் பிரகாஷ் நீண்ட சிறைவாசத்திற்கு பின்பு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் விடுதலையாகிய செய்தியையும்பிறகு அவருடைய பத்திரிகை பேட்டியைஒரு சில பத்திரி்கைகள் மட்டுமே வெளியிட்டிருந்தன. 
      சிறையில் ஏராளமாக மருத்துவ கட்டுரைகளையும்மருத்துவ புத்தகங்களும்,எழுதியுள்ளார். இனிமேல் சேவையுள்ளத்தோடு மருத்துவம் செய்யப் போவதாக உறுதி பூண்டுள்ளதாக சொல்லியுள்ளார். நம்புவோம்.!
        நிற்க. ஹர்சத் மேத்தா பல வருடங்களுக்கு முன்பு சிறையில் இறந்துவிட்டார். பங்குச்சந்தை உயர்வின்போது இந்தியாவின்அதிக வரிசெலுத்திய மனிதராக இருந்தஅவர்.பங்குச்சந்தையில் விளையாடி,பல்லாயிரம் கோடி சேர்ததிருந்தார்.  சிறு முதலீட்டார்கள் பணத்தை சின்ன மீனை விழுங்கும் சுரா வாக விழுங்கி இருந்தார்,ஆனால்,சிறையில் தான் ,பல வருடங்களுக்குப் பின் அவருடைய இறுதி மூச்சை விட்டார்..அடியேன் இதற்கு பின்பு பல  சமயங்கள் பங்குச்சந்தை பெருக்கமடைந்த போதுஆனந்தப்படவில்லை! அந்த ஆர்பாட்டங்களில் ஆசைப்படவுமில்லை. எனக்குத்தான்என் சிறிய முதலீடு ஒரு பாடம் நடத்தியிருக்கிறதே!
      புதியவர்கள் புதிது புதிதாக நுழைந்து வெற்றி பெறவும்தோல்வி அடையவும் பங்கு சந்தை திறந்தே இருக்கிறது! ஆனால் அங்கு வளைவுகளும்,  விளைவுகளும் ஏராளம்! பெரும் புள்ளி (புலி)களுக்கு மட்டும் தான் அங்கு இடம்,பூனைக்குட்டிகளுக்கு அங்கு இடமில்லை.
      பூதக்கண்ணாடியை பயன்படுத்தி ,அதன் விளம்பர எச்சரிக்கையை நீங்களும் வாசிக்கலாம்...,சிறிய எழுத்தில்சிகரட் பெட்டியில் உள்ளமற்றும்மதுவிலுள்ளஎச்சரிக்கைவாசகங்களைப் போல....!