Saturday, October 12, 2024

அடியோ (ஸ்) அமிகோ

அடியோ (ஸ்) அமிகோ -




அடியோ (ஸ்) அமிகோ -

சமீபத்தில் தமிழில் வெளியான மலையாளத் திரைப்படம். இப்படம் netflix ott தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.

ரசிக்கக்கூடிய புதிய முயற்சிகளை மலையாளத்தில் புதிய இயக்குனர்கள் திறம்பிடவே செய்கிறார்கள் என்று ,மீண்டும், மீண்டும் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.!
சுவாரசியமாக ஆரம்பித்துப் பிற்பகுதியில் சிறிது அயர்ச்சி அளித்தாலும் அரைத்த மாவை அரைக்காமல் சிறந்த சிறுகதைக் (அல்லது நெடுங்கதைக் )கான , கருவை  எடுத்து நல்ல திரைப்படத்தைத் தந்துள்ளார், இயக்குனர் நெகஸ் நாசர்.

தனது தாயாரின் இதயச் சிகிச்சைக்குப் பணமின்றி , சாதாரண பல வேலைகளைச் செய்து கொண்டு பொருளாதார நெருக்கடியால் நண்பர்களிடம் வட்டிக்குப் பணம் வாங்கி அதை இழுத்தடித்துக் கொண்டு திருப்பி கொடுக்கும் ஒரு நபரும்,
பெரும் வசதி படைத்த ஒரு பணக்காரரின் மகன்,வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இன்றிக் குடிப்பழக்கத்தால் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு நபர், என இருவரும் சந்திக்கிறார்கள்.
கதையின் பிற்பகுதியில்
அந்த பணக்கார இளைஞரின் வாழ்க்கை அவரை ஏன், இப்படியான நபராக மாற்றி விட்டிருக்கிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வரும்போது ,நம்மிடம் வெறுப்பைச் சம்பாதித்த அந்த இளைஞனின் விட்டேத்தித் தனத்திற்கான நியாயம் புரிய வரும் மாற்றத்தினையும், இயக்குனரின் கதாபாத்திரத் தேர்வுகளுக்காகச் சிலாகிக்கலாம்.
இந்த இரு நபர்களும் இரண்டு நாட்கள்
இணைந்து பயணிக்கும் போது , அப் பயணம் பல ஆச்சர்யங்களை நமக்குத் தெளிக்கின்றது.
 தனது வருமானத்திற்குத் தகுந்தாற் போல் குடிப்பழக்கம் கொண்ட சுராஜ், குடித்துக்கொண்டே ...இருக்கும் நபரான ,ஆசிப்பிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் சந்தர்ப்பங்கள்,நம்மையும் நெளிய வைத்துக் கொண்டே போய்க்கொண்டிருக்கும். 

இவர்கள் ,திருவனந்தபுரம் ,ஆலப்புழா, எர்ணாகுளம் ,கொல்லம் ,எனத் தாறுமாறாக -  சுராஜை, ஆசிக், கிட்டத்தட்ட, இழுத்துக் கொண்டு
பயணிக்கும் போதான , நெடுகிலும் பல்வேறு கலவையான சம்பவங்கள். ,அவை,ஆரம்பத்தில் வெறுப்பேற்றினாலும், அவைகளும் பிறகு இந்தக் கதைக்குத் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகி , இந்தத் திரைக்கதையின் தேர்விற்கு வலுச்சேர்த்து , கூடுதலான நியாயமும் சேர்க்கின்றன.

வாழ்க்கையில் அவசிய தேவைக்குக் கூட பணமின்றித் தவிக்கும், ஆனாலும் நேர்மைத் தவற விரும்பாத ஒரு எளிய மனிதனின் கதாபாத்திரத்தை சுராஜ் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

ஆசிப் அலி ,ஏற்றுச் செய்த,பெரும் வசதி படைத்த இளைஞன் கதாபாத்திரம் ,பல்வேறு சமயத்தில் நமக்கு மகிழ்ச்சியையும், வெறுப்பையும் ,ஏற்படுத்த கூடியது ., இக் கதாபாத்திரத்தை ஏற்று,அதைத் திறம்படவே ,அவர் வெளிப்படுத்தியுள்ளமைக்காக, அவரும் பாராட்டுகுரியவரே! 

திரைப்படத்தின் இறுதி பகுதியில் பணக்கார இளைஞனைத் திருத்த அவர்கள் குடும்பம் எடுக்கும் முடிவுகளால், இவர்கள்இருவரும்
கால்பந்தாட்டத்தில் உதைபடும் பந்தினைப் போல மாறும் போது, கதை அயர்ச்சியைத் தந்தாலும், அதையும் மீறி புதிய கதைக் கலங்களையுடைய திரைப்படங்களைப் பார்க்க விரும்புவோருக்கு மட்டுமே,
இது ஒரு சிறந்த கதைப் படம்.!

Tuesday, October 08, 2024

அன்பரே

நீங்களும் அன்பரே...
அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற அரபிய கதை நிச்சயமாக அனைத்து சிறார்களுக்கும் பிடித்த கதையாக இருக்கும் அது போலவே எனது துவக்கப்பள்ளி காலகட்டத்தில் இந்த கதையை வாசித்த போது முக்கியமாக என்னை கவர்ந்த விஷயம் அலாவுதீன் அழைத்த போதெல்லாம் வரும் பூதம் அவன் கேட்டதை எல்லாம் கொண்டு வந்து தரும். அதற்கு அவன் ஒரு விளக்கை தேய்க்க வேண்டும். , அந்த விளக்கை அவன் ஒரு பாதாள குகையில் போய் எடுத்து வருவான்.அந்த பாதாள குகையை பற்றிய வர்ணனையில், விளக்கை, அந்த பாதாள குகை, மரகதம், வைரம் போன்ற அற்புத பொங்கிசங்களை பொதித்த ஒரு அழகிய புதையல் தோட்டத்திற்கு நடுவில் எடுத்து வருவான். தங்கம் வைரம் போன்ற பொங்கிஷங்கள் நிறைந்த அந்த பூங்காவை நினைத்துப் பாருங்கள், அது போன்ற ஒரு பூங்காவில் நுழைந்த ஒருவரது மனது எப்படி மகிழ்ச்சியில்,ஆச்சரியத்தில், திகைத்து இருக்கும்.
இது போன்ற ஒரு ஆச்சரியத்தையே முதன் முதலாக நான் நூலகத்தில் நுழைந்த போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை ஒப்பிட்டு சொல்லலாம். நூல்கள் நிறைந்த ஒரு கட்டிடத்தை நினைத்துப் பார்த்தால், அது மிகப் பெரிய பொங்கிசங்களை தாங்கி இருக்கும் பூந்தோட்டமாகவே என்னால் கற்பனை செய்து பார்க்க முடியும்.

இது போன்ற ஒரு அனுபவமே ,முதன்முதலாக ஆறாம் வகுப்பு படித்தபோது பொது நூலகத்தில் உறுப்பினராக நுழைந்தபோது எனக்கு ஏற்பட்டது. 
நான்காம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் சவரக்கடையில் அந்த கடைக்காரர் வாங்கி வைத்திருக்கும் அம்புலி மாமா ,பால மித்ரா, போன்ற குழந்தைகள் மாத இதழ் என்னை கவர்ந்திழுத்து, அந்த சவரக்கடைக்காரருடன் நட்பை ஏற்படுத்தியது.
அதன் பிறகு காலமெல்லாம் கம்பராமாயணத்தில் கூறியது போல, குகனோடு ஐவரானும் ,சுக்ரீவனோடு அறுவரானோம் ,விபீஷணனோடு எழுவர் ஆணோம்.என்று பகவான் ராமபிரான் சிறந்த தோழர்களையெல்லாம் தனது குடும்பத்தினராக, சகோதரர்களாக ,ஏற்றுக் கொண்டதை போல, எனது பட்டியல் புத்தகங்களோடு இருக்கும் அன்பர்கள் அனைவரையும் ,வயது வித்தியாசம் பார்க்காமல் உறவுகளாக நினைக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது.

 அவர்களும் பெருந்தன்மை மிக்கவர்களாகவே இருந்தனர்,சின்னஞ்சிறுவனான என்னையும் அவர்கள் நட்போடு அரவணைத்துக் கொண்டார்கள்.
அதுபோல் புத்தகங்களை வைத்துக்கொண்டு அதை யாருக்கும் கொடுக்காதவர்கள் மீது ,எனக்கு பொறாமை கலந்த நெருடல் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது.

முதன்முதலாக இப்படி ஒரு பொறாமையை ஏற்படுத்தியவர் ,எங்களது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். , அவருடைய மிகப்பெரிய அறையில் அவருக்கு பின்னால் சுமார் 500 புத்தகங்களாக அடக்கப்பட்டு இருக்கும்.புதையலை பூதம் காப்பது போல ,அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு பிரம்மை. (அந்த நூலகத்திலிருந்து புத்தகங்கள் வெளியே போனதை யாரும் பார்த்தும் அறியோம் ) .அவரோ ,மாணவர்களை திருத்துவதில் வார்த்தைகளை விட பிரம்பு தான் உதவும் என்ற கொள்கை உடையவர். அவருக்கு எப்போதெல்லாம் கோபம் வரும், எப்போது சாதாரணமாக இருப்பார்,என்பது எவருக்கும் தெரியாத விஷயம். 

இப்படியான காலகட்டங்களில் எனக்கு பொதுநூலகம் தான் ஒரு பெரும் கதவை திறந்து விட்டது.
மூன்று ரூபாய் உறுப்பினர் கட்டணத்துடன் முதன் முதலாக சேர்வதற்கு எனது தாயார் காய்கறிகள் வாங்கி வரச் சொல்லி கொடுத்த பணம் தான் உதவியது. 
காய்கறி வாங்கி வர போனவன் ,இரண்டு நாட்கள் கழித்து தான் வீட்டுக்கு திரும்பி வந்தேன்.அம்மாவின் கோபப்பார்வைக்கு தப்பித்துக் கொள்வதற்காக பெரியம்மாள் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்தேன்.

பிறகான காலங்கள் எல்லாம் என்னோடு தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தவை புத்தகங்கள் ,புத்தகங்கள், தான் ....  நண்பர்களோடு விளையாடிய நேரங்களை காட்டிலும் புத்தகங்கள் உடன் செலவழித்த நேரம் அதிகமாகவே இருக்கும். பள்ளியிலும் எனக்கு நல்ல மதிப்பெண் பெரும் மாணவன் என்ற பெயரும் இருந்ததால்,தடையற புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் பெருகிக்கொண்டே போனது.
ஒரு நேரத்தில் மூன்று உறுப்பினர்கள் சந்தா கட்டி புத்தகங்கள் வாங்கும் தீவிர உறுப்பினராக நூலகத்தில் இருந்தேன். மேலும்
நூலகர் சேஷாத்திரி,நூலக உதவியாளர் கதிரேசன் இவர்களுடைய செல்ல பிள்ளையாகவும் இருந்ததேன்.

அவ்வப்போது தினசரி கிடைக்கும் காசுகளை சேர்த்து,மாதம் மாதம் காமிக்ஸ் வாங்குவதற்காக, டவுனுக்கு போய் வாங்கி வரும் வழியிலேயே பஸ்ஸிலே படித்து முடித்து விடுவேன்.

புதுக்கோட்டை டவுனில் எனது ஒன்றுவிட்ட அக்கா வீடு இருந்தது. டவுனுக்கு போய் வர கால் முளைத்த பருவம் வந்தபோது, பழைய புத்தகக் கடைக்காரர் பழனிச்சாமி அறிமுகமானார். அன்பு மிகுந்தவர்,அவர் கடையில் பாதி நாள் அமர்ந்து படிக்கும் அளவிற்கு அவரோடு நட்பு முண்டு. 

எட்டாம் வகுப்பு படிக்கும் போது,இதேபோல் 200 புத்தகங்களுக்கு மேல் வீட்டில் வைத்திருக்கும், நூர் அக்கா வீட்டிற்கும் நான் சின்னத்தம்பியே. இரண்டு வீதி தள்ளி இருக்கும் அவர்கள் ,எனது பாட்டியின் உறவினர். பாதி நாட்கள் அவர் வீட்டில் இருந்து பழைய ஆனந்த விகடன் தொகுப்புகளை எல்லாம் வாசித்து முடித்து இருந்தேன்.

பிற்காலத்தில் சேலம் வந்து வணிகராக மாறிய போது கூட இந்தப் பழக்கம் தான் தொடர்ந்து வந்தது. வீடெல்லாம் புத்தகங்கள் வைத்திருக்கும் தோழர் சகஸ் , எனது மனம் கவர்ந்த அன்பரானார். 
புத்தகங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காகவே, பாலம்புத்தக நிலையத்தை ஆரம்பித்தவர். வாசிப்பு பற்றி புதுமையான அத்தனை விஷயங்களையும் சேலத்தில் நிகழ்த்திக் கொண்டுருக்கும் சகஸ்.,
என்னை மட்டுமல்ல புத்தகங்களை நேசிக்க கூடிய அத்தனை பேரையும் கவர்ந்தவர் என்பதே சரியாக இருக்கும்.

எட்டாம் வகுப்பு படிக்கும் போது கையெடுத்து பிரதியை நானே எழுதி சக நண்பர்களிடம் சுற்றுக்கு விட்டு அனுபவம் உண்டு, 1984 கல்லூரி மாணவனாக இருந்தபோது இணைந்த,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் , கடந்த 40 ஆண்டு கால கட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை கொடுத்து, என்னை புத்தகங்களை நேசிக்கும் மனிதர்களோடு எப்போதும் சங்கமித்து வரும் வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது.

 எனது வாசிப்பிற்கு ஆதர்ச சக்திகளாக விளங்கிய நட்புகள், குறிப்பாக, அக்கால கட்டம் துவங்கி, இப்பொழுதும்  உறவுகளாக விளங்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த என்.ராமச்சந்திரன்,ராஜேந்திர சிங், முத்து நிலவன்,கவிஞர் ஜீவி, (மறைந்த) சிறந்த எழுத்தாளர் கந்தர்வன், இவர்களுடன் அன்னவாசல்
ஜோஷி , எனது பள்ளி நண்பனும் தற்போது தொழிலதிபருமான சம்சுதீன்
இப்படியாக ...
ஏராளமான ஆரம்ப கால நண்பர்களையும்,தற்போதைய நண்பர்களையும்  கூரலாம்.
நீளமாக கதை போய்க்கொண்டிருக்குமே என்று பலர் பெயர் குறிப்பிடவாய்க்கவில்லை....
எனவே யார் பெயரை யாவது குறிப்பிட விட்டிருந்தால் அன்பு கூர்ந்து பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 
மேலும்,நீங்களும் புத்தகங்களை வாசிப்பதற்காக தேடி ஓடிக்கொண்டே இருப்பவராயின், நீங்களும் எனது நண்பரே..