Monday, September 26, 2022

சவுக்கடியும் மன்னரும்
________________




மன்னர் 
விரும்பும் 



போது

அடிக்கடி முல்லாவை அழைத்து பேசுவார். மன்னர் ஒரு காலத்தில் இளமையில் அழகாக இருந்தவர்,தற்போது மூப்பின் காரணமாக தளர்ந்தவராக இருந்தார்.
முல்லா இருந்த சமயத்தில் மன்னர் தன்னை ஓவியமாக வரைய இரண்டு சிறந்த ஓவியர்களை வரவழைத்து இருந்தார்.இருவரும் ஓவியம் வரைந்து மன்னரிடம் கொடுத்தார்கள். இரண்டு ஓவியங்களையும் பார்த்தார் மன்னர். ஒன்றை பார்த்து முகம் சுளித்தார், இன்னொன்றை பார்த்து முகம் மலர்ந்தார். பிறகு அமைச்சர் ஒருவரை கூப்பிட்டு சிறப்பாக வரைந்திருக்கிறார் என்று ஒரு ஓவியருக்கு நூறு பொற்காசுகளை கொடுத்து அனுப்பினார். 
இன்னொரு ஓவியரை முகம் கடுகடுக்க பார்த்து அமைச்சரிடம் சொல்லி இவருக்கு இரண்டு சவுக்கடி கொடுத்து அனுப்புங்கள் என்றார். 
இருவரும் சென்ற பிறகு முல்லா பவ்யமாக மன்னரை பார்த்தார். மன்னர் இரண்டு ஓவியங்களையும் முல்லாவிடம் காண்பித்தார். ஒரு ஓவியர் வரைந்த ஓவியத்தில் மன்னர் அழகாக இளமையாக இருந்தார். அவருக்குத்தான் 100 பொற்காசுகள் கொடுத்து அனுப்பி இருந்தால் மன்னர். 
இன்னொரு ஓவியர் தற்போது மன்னர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அச்சு அசலாக வரைந்து இருந்தார். அதிலும் சிரித்துக் கொண்டுதான் மன்னர் இருந்தார் ஆனால் முகத்தில் சுருக்கங்கள் இருந்தன.அவருக்குத்தான் இரண்டு சவுக்கடி கொடுத்து மன்னர் அனுப்பி இருந்தார்.
உண்மையை பதிவு செய்த இரண்டாவது ஓவியரின் நிலை கண்டு முல்லாவிற்கு மனதிற்குள் மருக்கடியாக இருந்தது. 
உண்மைதான் எவ்வளவு கசப்பானது என்று மனதிற்குள் முல்லா நினைத்துக் கொண்டார்.

முல்லா மன்னரிடம் விடை பெற்று கிளம்பினார். முல்லாவைப் பார்த்து மன்னர் சிரித்து வழி அனுப்பினார். இரண்டாவது ஓவியரின் அச்ச அசலான ஓவியத்தை பார்த்தது போல் இருந்தது அவருடைய சுருக்கங்கள் நிறைந்த வயோதிக முகம்.
முல்லா பவ்யமாக தலை வணங்கி மன்னரிடம் விடைபெற்றார்.