Tuesday, October 18, 2016

குணக்கேடு: சிறுகதை : சேகு



குணக்கேடு:
                                                                                         சிறுகதை : சேகு


     பூபதியிடத்தில் திருமண புகைப்பட ஆல்பத்தையும், சி.டியையும்
கொடுத்து விட்டு, மீதி பணத்தையும் போட்டோகிராபர் கடை ஊழியர் 
வாங்கிக் கொண்டு, எல்லாம் பிரம்மாதமாக வந்திருக்கிறது, என்று 
எங்க வேல்முருகன் சார் சொன்னார் சார் என்று சொல்லி விட்டு 
கிளம்பினான்.

     அவன் கொடுத்த பெரிய அழகான பையில், இரண்டு 
ஆல்பங்களும், இரண்டு சி.டிக்களும் அழகான கவர்களுடன் 
இருந்தன., உற்சாகத்துடன்  பூபதி வீட்டிற்குள் பையை எடுத்துச்
சென்றான். ஆல்பத்தைக் கண்டவுடன் குடும்பத்தினர் அனைவருக்கும்
உற்சாகம் தொற்றிக் கொண்டது. 
     
     ஆல்பத்தை பிரித்து பூபதி மனைவி சங்கீதாவும், பூபதியின் அம்மா
சுந்தரவள்ளியும், பூபதியின் 8 வயதுமகள் சுபிக் ஷாவும் ஒன்றாக 
உட்கார்ந்து பார்க்க ஆரம்பித்தார்கள், கூடவே பூபதி அப்பா 
நவநீதமும் சேர்ந்து கொண்டார். அவரது செல்வமகள்  ராதிகாவின் 
திருமணத்தின் அழகிய  நிகழ்வுகள், மேலும் அழகாக 
புகைப்படங்களில் காட்சியளித்தது. மணமக்கள் தனித்தனியாகவும், 
இருவருமாகவும், உறவினர்களுடனும் என வண்ண மயமாக 
காட்சியளித்தது ஆல்பம். அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் 
எல்லோரும் சேர்ந்து இருக்கும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது 
கூடுதல்  சந்தோசமாக இருந்தது., புன்னகையும், மகிழ்ச்சியும், 
உற்சாக சிரிப்புமாக, வீடு கலை கட்டியது.

     பூபதி சி.டியை பிளேயரில் போட்டு ஹாலில் உள்ள பெரிய
எல்சிடி டிவியில் பார்க்க ஆரம்பித்தான்.சி.டி.ஓட ஆரம்பித்தபோது 
பூபதியின்  மனமும் திருமண வைபத்தை நோக்கிப் பயணித்தது.

     பூபதியின் அப்பா நவநீதம் திருப்பத்தூரில், சிறிய அளவில் நகை 
ஆசாரியாக, கடை ஒன்றை ஆரம்பித்தபோது அவர் திருமணம் கூட 
ஆகாத இளைஞராக இருந்தார். அவருடைய சிறிய கடையில் அவர் 
செய்யும், அழகிய டிசைன், தரம் இவற்றிர்க்காக படிப்படியாக
சுற்றுவட்டாரம் எங்கும்  அவருக்கு நகைத்தொழில் புகழ் சேர்த்துக் 
கொடுத்தது. அவருக்கு திருமணமாகியவுடன் சிறிது காலத்திலேயே
பூபதி பிறந்தான். நவநீதம், அவனுக்கு தனது தந்தை முத்துச்சாமி
நினைவாக முத்துச்சாமிபூபதி என்று பெயர் வைத்தார்.அவருடைய
சிறிய கடை, ஊரின் பிரதான கடை வீதிக்கு  இடம் பெயர்ந்தது. 
அவருக்கு அன்று பெரிய தொகை என்றாலும், சகாயவிலைக்குக் 
கிடைத்த சிறிய தார்சுகடையை விலைக்கு வாங்கி, முத்து 
ஜிவல்லர்ஸ் என்ற சொந்தமாகத் துவங்கினார்.

     பூபதிக்கு பிறகு, 11 வருடங்களுக்கு கழித்துத்தான் ராதிகா 
பிறந்தாள். எனவே ராதிகா வீட்டில் எல்லோருக்கும் செல்லம், 
அண்ணன் பூபதிக்கு ராதிகாவின் மீது அதிகம் பிரியம் . ராதிகாவை
குழந்தையாக இருந்த போது  தோளிலும், பிறகு மனதிலும் தூக்கி 
வைத்துக் கொண்டாடுவான். அப்பா, அம்மாவிற்கு சொல்லவே 
வேண்டியதில்லை, ராதிகா செல்ல மகளில்லை,  செல்வமகள், 
அவர்களுக்கு லெஷ்மியின் மறு உருவம்.பூபதி டிகிரி படித்தவுடன், 
அப்பாவுடைய கடைக்கு வந்து, எல்லாப் பொருப்புகளையும்  
கவனித்துக் கொண்டான் .அவன் பொருப்பாக கடையைக் கவனிக்க 
ஆரம்பித்த போது, சில வருடங்களிலேயே தொழில் அமோகமாக 
வளர்ந்தது,  கடையும் இரண்டடுக்கு மாடியாகப் புதுப்பிக்கப்பட்டு, 
கடையின் முன்பகுதியை அழகிய ஷோருமாகவும், நவநீதமும், 
பூபதியும் மாற்றியமைத்தனர். நவநீதத்தின் செல்வ வளம் 
அவருடைய கடை அழகிலும், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு, 
புதிதாகக் கட்டிய,  அவருடைய அழகிய பங்களா வீட்டிலும்
பளபளத்தது. 

     பூபதிக்கு சிறப்பான வகையில் திருமணம் நடத்தி வைத்தார்
நவநீதம்.  மருமகள் நல்ல படித்த பெண்ணாக, வசதியான 
குடும்பத்திலிருந்து எடுத்திருந்தார். மருமகள் சங்கீதாவும் கெட்டிக்காரி
ஆதலால், பெரும்பாலும் பாதி நேரமாவது நகைக் கடைக்குப் போய் 
ஒத்தாசை செய்வாள்.
 
     பூபதிக்கு தங்கை ராதிகா எப்படியோ அதே போல், ராதிகாவிற்கு
அண்ணன் மகள் சுமிக் ஷா செல்லம். ராதிகா படிப்பில் நல்ல 
கெட்டிக்காரி, அவள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து, பி.இ யிலும்
சிறப்பான மதிப்பெண்ணில் தேர்ச்சி அடைந்த போது, அவளுடைய 
அழகுக்கு, படிப்புக்கு ஏற்ற வகையில் மாப்பிள்ளையை தேர்வு 
செய்து வைக்க வேண்டுமென்ற முயற்சிக்கு,ஒரு சில 
மாதங்களிலேயே பலன் கிடைத்தது. பெரிய சம்பளத்தில் நல்ல 
மாப்பிள்ளை சேலத்து சம்பத்தப்புரம் என அமைந்தது. மகளுடைய 
திருமணத்தை நவநீதம் பிரம்மாண்டமாக நடத்தினார். பூபதிக்கு
அவனுடைய திருமணத்தை விட தங்கை திருமணத்தை, ஒரு படி
.மேலாக பெரும் விழாவாக கொண்டாடும் ஆசையிருந்தது.
 திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சிறப்பான முறையில் 
திட்டமிட்டு, மனமகன் வீட்டார் மெச்சும் வசம் செய்திருந்தான்.
நவநீதம் தனது ஒவ்வொரு பெரிய வாடிக்கையாரையும், விட்டுப்
போகாமல் அழைப்பு வைத்திருந்தார். இந்துக்களில் எல்லாத் 
தரப்பினரையும், ஏராளமான அவருடைய இஸ்லாமிய 
வாடிக்கையாளர்கள் எனவும், சுற்றி வர உள்ள எல்லா ஊர்களில் 
உள்ள அனைத்துத் தரப்பினரையும் அழைத்திருந்தார்.

     திருமண விழாவை அப்பா எதிர் பார்த்ததை விட பூபதி 
பிரம்மாதப்படுத்தியிருந்தான். காரைக்குடி பேமஸ் சமையல்காரர் 
மூர்த்தியினுடைய குரூப் அறுசுவை விருந்து, ஸ்வீட், ஐஸ்கிரீம்,
பாயாசம் என புக் பண்ணி முப்பது வெரைட்டி உள்ள சைவ 
உணவுகள் என, சாப்பிட்டவர்களை திக்குமுக்காட வைத்திருந்தான்.
மேடை அலங்காரம், விடியோ கவரேஜ் சிறப்பாக இருந்தது.

     திருமண நிகழ்வின் பிரம்மாதத்தில், ராதிகாவின் முகத்திலும்,
குடும்பத்தினர் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி முழுமையாக 
மின்னியது.

     அன்று புகைப்படங்களையும், ஹாலில் ஓடிய சி.டியைப் பார்க்கும்
போது, மீண்டும் அந்த மகிழ்ச்சி வந்து ஒட்டிக் கொண்டது.
நாளை வரப்போகும் ராதிகாவையும், மாப்பிள்ளை ரவியும்,
மாப்பிள்ளை வீட்டாரும், ஆல்பத்தை பார்க்கும் போது , ஆனந்தப் 
படுவார்கள் என்று நினைக்கும் போது பூபதி மனம் மலர்ந்தது.

     பூபதியின் கல்லூரி நண்பன் வேல்முருகன் திருமண 
வீடியோகிராபி செய்திருந்தான். புகைப்படமும் அவன் கம்பெனியே
செய்திருந்தது. வேல்முருகன் ஸ்டூடியோ காரைக்குடியில் புகழ் 
பெற்றிருந்தது. அவனே நேரில் தனது குரூப்புடன் திருமண 
கவரேஜை செய்திருந்தான்.  ராதிகாவின்  மாப்பிள்ளை வீட்டார் 
ஆல்பம், சி.டி-யை விட, நம் ஆல்பம், சி.டி சிறப்பாகவே நிச்சயம்
இருக்கும் என்றும் பூபதிக்கு நம்பிக்கையிருந்தது. பூபதியின் மன
ஓட்டத்தை தடை செய்தது சுபிக் ஷாவின் குரல்.  சுபிக் ஷா 
திடீரென்று "தாத்தா இந்தப் போட்டாவில், காணப் போன 
பட்டுப்புடவை" என்று சத்தமாகச் சொல்லி தாத்தாவிடம் 
காண்பித்தாள். சீர்வரிசையை எடுத்த போட்டாவில் அந்த 
பட்டுப்புடவை பளபளத்தது.நல்ல இளம் ஊதா கலர் பட்டுப்புடவை,
ராதிகாவிற்கு வாங்கிய மூன்று பட்டுப்புடவையில் திருமணப் 
பட்டுக்கு அடுத்தப் படியாக, ராதிகா பிரியப்பட்டு வாங்கிய புடவை
அது, தங்கச்சரிகைவேலைபாடுடன் புது டிசைனாக வந்திருந்தது, 
தள்ளுபடி போக திருபுவனத்தில் வாங்கியது விலை 24,000 ரூபாய். 
திருமண வரவேற்பில்  சீர்வரிசையை மாப்பிள்ளை வீட்டார் 
பார்வையிடவும், உறவினர் பார்க்கவும் தனி அறையில் 
சீர்வரிசையுடன் பட்டுப்புடவைகளை தட்டில் தனித்தனியாக பிரித்து 
வைத்திருத்தார்கள். கொஞ்ச நேரத்தில அந்த இள ஊதா பட்டுப்புடவை திருட்டு போயிருந்தது. அது எப்படி திருடு 
போனது என்ற கவலையிலும், அதை நவநீதம் குடும்பத்தார் அந்த
விசேச நிகழ்வில், கும்பலில் வெளியே தெரியாமல் பார்த்துக் 
கொள்ள வேண்டியும் இருந்தது. திருமணத்தில் ஒரு கரும்புள்ளியாக 
அதை யாராலும் மறக்க முடியவில்லை, குடும்பத்தினருக்கு 
மட்டுமே ஏற்பட்ட மனக்கஷ்டமாகவும் அந்த சம்பவம் அமைந்தது.
அன்றே வேறு ஒரு பட்டுப்புடவையை ,அவசரமாக உள்ளூரில் 
வாங்கி வந்து பூபதி மறுநாளில் சிர் வரிசையில் 
வைத்திருந்ததையும், பூபதி சிரமப்பட்டு அச்சம்பவத்தை மறக்கவே 
நினைத்திருந்தான். .

     சுமிக் ஷாவின் நினைவூட்டலால் நவநீதத்தின் முகம் வாடியது,
பூபதியின் முகமும் தான். அழகிய முகத்தில் உள்ள கரும்புள்ளி 
மாதிரியான அந்த நிகழ்வை அனைவரும் மறக்கத்தான் 
நினைத்திந்தார்கள். நவநீதத்தின் முகவாட்டத்தைக் கண்ட பிறகு
ஆல்பத்தைப் பார்ப்பவர்களின் குரல் சற்று சுருதி குறைந்திருதது. 
 பூபதியும் ஏரக்குறைய அதே மனநிலையில் சிடியைப் பார்க்க 
ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தில் சீர்வரிசைக் காட்சி வீடியோவில்
வந்த போது உன்னிப்பாகப் அந்தப் பட்டுப்புடவைத் தட்டை உற்றுப்
 பார்த்தான். அப்படியே அந்த அறையிலிந்து வீடியோ நகர்ந்த போது,
சீர்வரிசையைப் பார்த்தவர்கள் அனைவரும் வெளியே போனதையும் 
கவனித்தான், கேமரா வெளியே நகர்ந்த போது, கடைசியாக ஒரு 
புர்கா போட்ட முஸ்லீம் பெண், நடுத்தர வயதிருக்கும் பெண் 
சீர்வரிசையை பார்க்க உள்ளே வந்தவள் எல்லோரும் வெளியேறிய
பின் நிற்கும் காட்சியோடு, கேமரா சிறிது சிறிதாக நகர்ந்து, அந்த 
அறைக்கு வெளிப்புறம் வந்து பார்வையாளர்களை நோக்கிய போது, 
வீடியோவின் ஒரு மூலையில் அந்த அறையின் கதவு திறப்பு 
மட்டும் தெரிந்தது. உற்றுப் பார்த்தால் கதவு திறப்பின் வழியாக
சீர்வரிசையில் வைத்திருந்த டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி 
தெரிந்தது. அதில் சில விநாடி சலனம் தெரிந்தது, பிறகு கேமரா 
நகர்வில் அந்தப் புர்காபெண்  வெளியே வருவது ஒரு விநாடி 
தெரிந்தது.  பிறகு கேமரா வேறு வேறு திசையில் திருமணத்தைக்
கவர் செய்து  கொண்டே போனது. பூபதிக்கு ஏதோ எச்சரிக்கை 
உணர்வு தோன்ற, வீடியோவின் நேரத்தைக் கவனித்தான்.
சட்டென்று பொறி தட்டியது போல், அந்த மூன்று நிமிடக்
காட்சியைப் பார்க்க, ரிவைண்ட் செய்தான், திரும்பவும் அதே
காட்சிகள், இந்த முறை கதவிடுக்கில் தெரிந்த டிரஸ்டிங் டேபிள் 
கண்ணாடியின் சலனத்தை மறுபடு பார்த்தான் , ஒன்றும் தெளிவாக 
மட்டுப்படவில்லை. மறுபடியும் ரீவைண்ட் செய்து ஸ்லோமோசனில்
பார்த்தான். டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை மட்டும் ஜூம் செய்து 
பார்த்தான். ஒரே விநாடியில் தெரிந்த அந்த காட்சியில், அந்த புர்கா 
பெண் குனிவதும், பட்டுப்புடவையை மடித்து லாவகமாக
புர்க்காவிற்குள் மறைப்பதையும், பிறகு வெளியே வருவதும் 
தெரிந்தது. அந்தப் பெண் முகத்தை ஜூம் செய்து பார்த்த போது 
தெரிந்தது, அந்தப் பெண் யாரென்று,  நிறைய நகைகளுடன் 
காட்சியளித்தாள் அவள், அவனுக்கு அவளை யார் என்று தெரிந்து 
விட்டது. அவர்கள் கடைக்கு அடிக்கடி நகைகள் செய்ய வரும் சவுதி
வாப்பாவின் மனைவி தான் அவள்.
 
     பூபதி படபடப்புடன், "அப்பா இங்கே வந்து பாருங்க" என்று உரத்த
குரலில் நவநீதத்தை அழைத்தான். நவநீதம் புகைப்படங்களை 
பார்த்துக் கொண்டிருந்தவர், பூபதியின் பரபரக்கும் குரலால் எழுந்து 
வந்தார். திரும்ப அந்தக் காட்சிகளை, அவன் பார்த்த முறையிலேயே
ஜூம் செய்து அவளுடைய புடவைத் திருட்டை, ஸ்லோமோசனில்
காண்பித்தான். நவநீதம் கவனித்துப் பார்த்தவுடன் துணுக்குற்றார். 
பூபதி சற்று கோபமாக , நவநீத்தைப் பார்த்து "பாருங்கப்பா, அந்தப் 
பணக்காரியின் சின்ன புத்தியை" என்று சினத்துடன் சொன்னான்.
"இவளை போலீசில் பிடித்துக் கொடுக்கனும் பா" என்று சீறினான்.

     நவநீதம் சலனமற்று சில விநாடிகள் நின்றார். பிறகு பூபதி பக்கம்
திரும்பி "அவளைத் தெரியுமப்பா, சவுதி வாப்பா சம்சாரம் 
சுலையா பீவி தான் அவள் என்றவர். சற்று நிதானித்து, கண்களை 
மூடித் திறந்துவிட்டு சொன்னார், அந்த சுலையா பீவி நல்ல
பணக்காரர் பெண், அவளுடைய இரண்டு மகள்களுக்கும் 
நூற்றுக்கணக்கான பவுன்நகைகள் செய்து வாங்கியிருக்கிறாள்.
இப்போது சவுதியில் வேலை செய்யும் அவளுடைய இரண்டு 
மகன்களும் இன்ஜினியர்களாக பெரிய வசதியுடன் இருக்கிறார்கள்,
அவர்களுடைய மனைவிக்கும் இவள் தான் ஏராளமான 
நகைகள்செய்துநம்மிடம் வாங்கியிருக்கிறாள், அவளுடைய 
சொந்தக்காரர்கள் பலருக்கும் நம்மிடம் அழைத்து வந்து நிறைய
நகைகள் செய்திருக்கிறாள். இந்தப்பட்டுப்புடவை தொகயைவிட 
பலமடங்கு லாபம் நமக்கு சுலையா பீவி மூலம் வந்துள்ளது. 
அது மட்டுமல்ல ஊரில் பெருவாரியான முஸ்லிம் மக்களும்
நம்முடைய வாடிக்கையாளர்கள் என்று சொன்னவர். சற்று 
உறுதியான குரலில் "அவளுடைய தரத்திற்கு உள்ள செயலை 
அவள் செய்யவில்லையம்பா, ஆனால் அவளுடைய இந்தப் 
பட்டுப்புடவை திருட்டு அவளது சில்லறை திருட்டுப் புத்தியைக் 
காட்டினாலும், இதைக் காட்டிக் கொடுப்பதால், அவள் சார்ந்த 
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அவமானம் தான். 
அதனால், இந்த விசயத்தை யாருக்கும் தெரியாமல் விடுவதே 
நமக்கும், நம் வியாபாரத்திற்கும் அழகு. திருடுவது என்பது ஒரு 
குணக்கேடு, அது ஏழைகள் மட்டும் செய்வதாக நாம் நினைக்கிறோம், 
ஜாதி, மத பேதமில்லாமல் பலருக்கும் இந்த குணக்கேடு இருக்கும்.
அந்த வியாதி வசதியானவர்களுக்கும் வரக்கூடியதே, அவர்கள் 
தானாக ஒரு சந்தர்பத்தில் உணர்வார்கள்,இதோடு இதை விட்டு விடு 
பூபதி," என்றார். குடும்பத்தினரும் அதை புரிந்து கொண்ட 
மெளனத்தில் இருந்தார்கள்.

     பூபதி, நவநீதத்தின் வார்த்தையில் உள்ள பொருளைப் புரிந்து 
கொண்டபடியால், சில விநாடிகள் மௌனத்திற்கு பிறகு, அப்பா
சொல்வதே சரி என்று அவன் மனமும் சொன்னது, அமைதியாக
நவநீதத்தைப் பார்த்து "சரிப்பா" என்றான்.